தமிழ்நாடு - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ்நாடு (Tamil Nadu) ஓர் இந்திய மாநிலமாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. மதராசு மாநிலம் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.
முத்திரை

புவியமைப்பு
தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது.
நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.
இம்மாநிலத்தின் முக்கிய ஆறான காவிரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் குடகுமலையில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி ஆகியவை பிற முக்கிய ஆறுகளாகும்.
மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் தலைநகரமுமாகும். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா கடற்கரை சென்னையிலேயே உள்ளது. கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி மற்றும் வேலூர் தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும்.

வரலாறு
முதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டு வரலாறு
சோழ,சேர,பாண்டிய மன்னர்களால் ஆளப்பெற்று பல கோயில்களையும்,சிற்பங்களயும் பெற்ற கலை அம்சம் கொண்ட பகுதியாக விளங்குகிறது. "வட வேங்கடம் தென் குமரி தமிழ் கூறு நல்லுலகு" என்கிறது தொல்காப்பியப் பாடல்.
தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.
இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.

- மதுரை மீனாட்சியம்மன் கோயில் (1600). 170 அடி உயரத்தில் எழுகின்ற தெற்குக் கோபுரம்
பாண்டியர்களுடைய காலம் கிமு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.
கிபி 1 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டு வரை
முற்காலச் சோழர் கிபி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்.

- கிபி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரை
Shore Temple அமைத்தவர் பல்லவர் இடம் மாமல்லபுரம் (கி.பி.8நுர்ரண்டு.) – யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தலமாகும்.
கி.பி நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகின்றது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.
இக்காலக்கட்டத்தில் (கிபி 300 - கிபி 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
